இந்த வழக்கு, அக்கரைப்பற்று பட்டின ஜும்மா பள்ளிவாசலை நிர்வகிக்கும் சட்டபூர்வ உரிமை யாருக்கு உள்ளது என்ற பிணக்கு தொடர்பானதாகும். இப்பள்ளிவாசல், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரம்பரிய “குடி முறை” என அழைக்கப்படும் குடும்ப மற்றும் சமூக வழக்கங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டில், பள்ளிவாசலின் தலைவர் (President) மற்றும் பொருளாளர் (Treasurer) பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் விளைவாக, இவ்விடயம் இலங்கை வக்ஃப் சபையின் முன், வழக்கு எண் WB/6005/2013 ஆக தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய வழக்கங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று புகார் தெரிவித்த ஜமாஅத் உறுப்பினர்கள் ஆவர். பாரம்பரிய உரிமை இல்லாத சிலர், பள்ளிவாசலின் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மனுதாரர்கள்:
- மௌலவி S.D.M. ஹனீபா
- S.M. ஃபாரூக்
- M.I. தாசிம்
- A.L. தவம்
- K.A. சமன்
- A.M.A. இஸ்மாயில்
- A.J.M. சஜாத்
- M.P.M. அலியார்
- M.M. தாஹிர்
- M.D.M. நூர்தீன்
- மௌலவி M.K.A. ஸியாத்
- M.I. மீரா முகிதீன்
வழக்கின் பதிலாளர்கள், மனுதாரர்களின் கூற்றுகளை மறுத்து, பள்ளிவாசல் நிர்வாகத்தில் பங்குபெற அல்லது பதவி வகிக்க தங்களுக்கும் உரிமை உள்ளது என்று வாதிட்டனர்.
பதிலாளர்கள்
- A.T. ஃபாரூக்
- D.S. ஆதம்லெப்பை
- S.M. அப்துல் ஹசன்
- M.A. சாலிம்
- A.R. பிஷ்ருல்ஹஃபீ
- M.I. கியாஃபுதீன்
- M.A. ஆதம்லெப்பை
- M.P.M. ஹாசிம்
- M.A.M. சுல்தான்
- A.K. அப்துல் ஜப்பார்
- L.M.M. யஹ்யா
- M.I. யாசீன் பாவா
- S.I. இப்ராஹீம்லெப்பை
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, 2016 ஆம் ஆண்டில் வக்ஃப் சபை புதிய நம்பிக்கையாளர் சபையைத் தேர்வு செய்ய முயன்றது. இருப்பினும், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் பதவி தொடர்பான தகராறு சுமூகமாக தீர்க்கப்படவில்லை.
மௌலவி M.K.A. ஸியாத் மற்றும் மர்ஹூம் ஜமீல் (கனூஸ்) ஆகிய இருவரும் தலைவர் பதவிக்குரியவர்களென உரிமை கோரினர். இந்த முடக்கம் காரணமாக, நம்பிக்கையாளர் சபை உப தலைவர், ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ஜனாப் . M.M.M. உதுமலெபே அவர்களால் நிர்வகிக்கப்பட்டது.
2016 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபையினர், வழக்கு முடிவடையாத காரணத்தால் 2025 வரை பதவியில் தொடர்ந்தனர்.
மனுதாரர்கள், சாட்சிகள், சத்திய ஓலைகள் (Affidavits) மற்றும் ஆவணங்கள் மூலம் தங்களின் வழக்கை பின்வருமாறு எண்பித்தனர்:
1 . தலைவர் பதவி, பாரம்பரியமாக லெப்பைக் குடி – சின்ன பொலிஸானை கத்தாரைக்கு உரியது
2 . லெப்பைக் குடி – ஆராச்சி போடியார் கத்தாரை, சுமார் 1990க்குப் பின்னர் உருவான புதிய கத்தாரை ஆகும்
3 . பொருளாளர் பதவி, பாரம்பரியமாக ராசம்பிள்ளை குடி – நாச்சியார் கத்தாரைக்கு உரியது
15.05.2025 அன்று, இரு தரப்பின் சட்டத்தரணிகளும் “மரபு வழி அவணம்” என்ற தலைப்பில் சமரச ஆவணத்தை தாக்கல் செய்தனர். ஆனால், 4ஆம் பதிலாளர் ஜனாப். M.A. சாலிம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசாரணையை மீண்டும் தொடர கோரினார்.
பதிலாளர்கள் சத்திய ஓலைகளை தாக்கல் செய்திருந்தாலும், தேவையான சாட்சிகளை அழைக்கவோ அல்லது மேலதிக சான்றுகளை முன்வைக்கவோ தவறி இருந்தனர்.
03.09.2025 அன்று வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பிற்குப் பிறகும், அவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
முன்வைக்கப்பட்ட அனைத்து சான்றுகளையும் பரிசீலித்த பின்னர், வக்ஃப் சபை பின்வருமாறு தீர்மானித்தது:
- அக்கரைப்பற்று நகர ஜும்மா பள்ளிவாசல், சட்டபூர்வமான பாரம்பரிய குடி முறையின்படி நிர்வகிக்கப்படுகிறது
- லெப்பைக் குடி – சின்ன பொலிஸானை கத்தாரையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்குரியவர்கள்
- பொருளாளர் பதவி, ராசம்பிள்ளை குடி – நாச்சியார் கத்தாரைக்கு உரியது
- பதிலாளர்கள், தங்களின் நிலைப்பாட்டை நிரூபிக்கத் தவறியுள்ளனர்
மேலும், வக்ஃப் சபை பின்வரும் கட்டாய உத்தரவுகளை வழங்கியுள்ளது:
- நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, உத்தரவு வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் திணைக்கள சமர்ப்பிக்க வேண்டும் (04.02.2026க்கு முன்)
- தற்போதைய நிர்வாக பொறுப்பாளர்கள், நான்கு வாரத்திற்குள் எழுத்து வடிவ யாப்பினை சமர்ப்பிக்க வேண்டும் (25.02.2026க்கு முன்)
- பள்ளிவாசல் புனரமைப்பு திட்டங்கள், வரைபடங்கள் மற்றும் கட்டிடக் குழு விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் (04.02.2026க்கு முன்)
இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படாவிட்டால், மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என வக்ஃப் சபை எச்சரித்துள்ளது.
வக்ஃப் சபையின் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட எந்த தரப்பினருக்கும், வக்ஃப் தீர்ப்பாயத்திலோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ (Court of Appeal) மேல் முறையீடு செய்யும் உரிமை உண்டு.
இந்த தீர்ப்பு நீண்ட காலமாக நீடித்த தகராறை முடிவுக்கு கொண்டு வந்தாலும், ஒரு முக்கியமான சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
“ஆராச்சி போடியார் கத்தாரை” உண்மையில் புதிதாக உருவான குழுவாக இருந்தால், அது இந்த தீர்ப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய குடி முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில், ஆராச்சி போடியார் கத்தாரைக்கு தனியான மரைக்காயர் இருக்க முடியாது, மேலும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் பிரதிநிதித்துவமும் வழங்க முடியாது. அப்படியானால், அக்குழுவைச் சேர்ந்தவர்கள் மரபுப்படி எந்த கத்தாரையைச் சேர்ந்தவர்கள்?
மேலும், எதிர்கால மரைக்காயர் தேர்வுகளில், அவர்கள் எவ்வாறு தங்களின் தேர்வுரிமையை பயன்படுத்த முடியும்?
இந்த விடயம், புதிய யாப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். அதுவே சமூக ஒற்றுமையையும் நீண்டகால சமாதானத்தையும் உறுதி செய்யும்.