ரணில் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகளும் தண்டனைகளும்

#பின்னணி:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 செப்டம்பரில் அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டபோது, திரும்பும் வழியில் தனது மனைவியின் தனிப்பட்ட நிகழ்வொன்றில் பங்கேற்க லண்டனில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். இதற்காக அரச நிதியில் ஒரு கோடி அறுபத்து ஒன்பது இலட்சம் ரூபாய் முறைகேடாக செலவழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

#ரணில்_தரப்பின்_விளக்கம்:

இது அதிகாரபூர்வமான விஜயம், மனைவியின் பயணச் செலவுகள் தனிப்பட்ட முறையில் செலுத்தப்பட்டது. ஜனாதிபதியின் விஜயங்களின்போது ஏற்படும் கூடுதல் செலவுகள், தங்குமிடம், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவுகள் போன்றவை, ஜனாதிபதிக்கான சட்டபூர்வ சலுகைகளுக்குள் வருபவை என ரணிலின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

#குற்றச்சாட்டுகளும்_தண்டனைகளும் :

1. பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம், பிரிவு 5(1) – அரச சொத்தை குற்றமுறையாக கையாடல் செய்தல்.

தண்டனை: குறைந்தது 1 வருடம் தொடக்கம் அதிகபட்சம் 20 வருடங்கள் வரையிலான சாதாரண அல்லது கடூழிய சிறைத்தண்டனை,
மேலும் முறைகேடாக பயன்படுத்திய சொத்தின் பெறுமதியின் மூன்று மடங்கு (சுமார் 5 கோடி ரூபாய்) அபராதம்.

2. தண்டனைச் சட்ட கோவை பிரிவு 386 – குற்றமுறையான ஆதனக் கையாடல்.

தண்டனை: அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்.

3. தண்டனைச் சட்ட கோவை பிரிவு 389 – குற்றமுறையான நம்பிக்கைத் துரோகம்.

தண்டனை: அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்.

#பிணை_தொடர்பான_விதிமுறைகள்:

குற்றத்தின் பெறுமதி ரூ. 25,000 ஐத் தாண்டினால், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் #வழக்கு_முடியும் வரை மறியலில் வைக்கப்பட வேண்டும். விதிவிலக்கான விஷேட சூழ்நிலைகளில் மட்டுமே பிணை வழங்கப்பட முடியும்.

#பிற்குறிப்பு

கைது செய்யப்பட்ட நாள் (வெள்ளிக்கிழமை), குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், பிணை வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்த அரச தரப்பின் வாதங்கள், ஆகியவற்றை நோக்குகையில், ரணிலை கிடுக்கிப்பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கத்தை தொளிவாக வெளிப்படுத்துகிறது.

இது வெறும் தொடக்கம் அல்ல; பெரிய அரசியல் அதிர்வின் முன்னோட்டமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

ரணிலின் “#ராஜதந்திரம்” வெல்லுமா, அல்லது தோழர்களின் “#போராட்ட_ஆற்றல்” மேலோங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.