கைது செய்யப்பட்ட ஒருவரை சிறையில் வைக்க வேண்டுமா, அல்லது பிணையில் விடுவிக்க வேண்டுமா?
இந்த முக்கியமான முடிவை நீதிமன்றம் எந்த அடிப்படையில் எடுக்கிறது தெரியுமா? குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் பிணை உரிமை இருப்பதில்லை; அது சட்டத்தின் கையில் இருக்கும் ஒரு சமநிலைத் தராசு.
கைதுக்குப் பின் என்ன நடக்கும்?
கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரும் பொதுவாக 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அப்போது, நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்கலாம் அல்லது மறியலில் (Remand) வைக்கலாம்.
மறியல் ஏன்?
விசாரணையைத் தடையின்றி நடத்த,அல்லது
சாட்சியங்களைக் குலைக்கும் ஆபத்தைத் தவிர்க்க, அல்லது
சந்தேக நபர் சமூகத்திற்கு ஆபத்தானவராகக் கருதப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் மறியல் உத்தரவிடும்.
பிணை பெறுவது எப்படி?
பிணை கோரிக்கை குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இரு வகைப்படும்:
1. பிணை பெறக்கூடிய குற்றங்கள் (Bailable Offence):
இங்கு, கைதான நபருக்கு பிணை பெறுவது ஒரு உரிமை. பொதுவாக நீதிமன்றம் உடனடியாக பிணையை வழங்கும்.
2. பிணை உரிமை இல்லாத குற்றங்கள் (Non-Bailable Offence):
இங்கு பிணை பெற உரிமை இல்லை. இருப்பினும், நீதிமன்றத்திடம் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும். பிணை வழங்குவது முற்றிலும் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பொறுத்தது.
சிறப்புச் சட்டங்களின் முக்கியத்துவம்
சில குறிப்பான குற்றங்கள், குறிப்பிட்ட விஷேட சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுகின்றன. அந்தச் சிறப்புச் சட்டங்களில் பிணை குறித்து தனி விதிகள் இருந்தால், பொதுச் சட்டத்தை விட அந்த விதிகளே முன்னுரிமை பெறும்.
உதாரணமாக பயங்கரவாத தடைச்ச சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்க்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நிதிமன்றிற்கு இல்லை.
ரணில் பிணை எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது?
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழக்கு
அவர் ‘பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம்’ கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்தக் கடுமையான விஷேட சட்டத்தின்படி, சிறப்பு சூழ்நிலைகள் (Special Circumstances) காணப்பட்டால் மட்டுமே பிணை வழங்க முடியும்.
சிறப்பு சூழ்நிலைகளுக்கு உதாரணமாக கடுமையான நோய், வழக்கில் சட்டப் பிழை இருத்தல், அல்லது சிறையில் வைத்திருப்பது கடும் அநீதியானது போன்றவற்றைச் சொல்லலாம்.
ஆகஸ்ட் 22-ல், ரணில் விக்கிரமசிங்க தனது மருத்துவ நிலையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால், நீதிமன்றம் அவரின் பிணை கோரிக்கையை நிராகரித்தது.
ஆகஸ்ட் 26-ல், போதுமான மருத்துவ சான்றுகளை சமர்ப்பித்த பிறகு, நீதிமன்றம் சிறப்பு சூழ்நிலை ஏற்பட்டதாக கருதி பிணையை வழங்கியது.
முக்கியமான தெளிவு:
பிணை என்பது விடுதலை அல்ல!
பிணை என்பது தற்காலிக விடுவிப்பு மட்டுமே, முற்றிலுமான விடுதலை அல்ல.
பிணை கிடைப்பது என்பது, அதிகாரிகளோ நீதிமன்றமோ அந்த நபரை ஆதரிக்கிறது என்று அர்த்தமல்ல.
இதன் உண்மையான நோக்கம், குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதாகும்.
பிணையில் விடுவிக்கப்பட்ட நபர், வழக்கு முடியும் வரை ஒவ்வொரு தவணையிலும் நீதிமன்றத்தில் கட்டாயம் வருகை தர வேண்டும். இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை பெறுவது உறுதியாகும்.
சுருக்கமாக
பிணை என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தீர்ப்பு வரை சுதந்திரமாக இருக்க அனுமதிக்கும் ஒரு சட்டரீதியான வழிமுறையாகும்.
இது குற்றத்தின் தன்மை, தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.