கைது, விளக்க மறியல், பிணை

சட்டம், அநேக நேரங்களில் பொது மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. சட்ட வரம்புக்கு உட்பட்டே நீதிமன்றங்கள் செயற்படும். ஆனால் பொதுமக்களோ, நீதிமன்ற தீர்ப்புகள் தங்களது தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகவேண்டும் என விரும்புகின்றனர்.

இவ்வாறாக, அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படும் விடயங்களாகக் கைது, விளக்க மறியல் மற்றும் பிணை ஆகியவற்றைக் கூறலாம்.

ஒரு நபருக்கு எதிராக ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் போது, போதுமான ஆதாரங்கள் அல்லது நியாயமான காரணங்கள் இருக்குமானால், சந்தேக நபரை, பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தின் முன் முன்னிலைப்படுத்துவார்கள்.

கைதுகளை இரண்டு வகையில் நடைபெறும் :

1. பிடி விறாந்துடன் கைது செய்தல் – சில குற்றங்களுக்காக, கைது செய்யப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்திலிருந்து பிடி விறாந்து பெறப்படல் வேண்டும்.

2. பிடி விறாந்து இல்லாமல் கைது செய்தல் – கொலை, பயங்கரவாதம் அல்லது போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களுக்கு, சட்டத்தால் அனுமதிக்கப்பட்டபடி, சந்தேக நபரை பிடிவிறாந்து இல்லாமல் கைது செய்யலாம்.

பொதுவாக, கைது செய்யப்பட்டவுடன், சந்தேக நபர் 24 மணி நேரத்திற்குள் ஒரு மஜிஸ்திரேட் முன் முன்னிலைப்படுத்த வேண்டும்.

இதன் பின்னர், ஒரு சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்படலாம் அல்லது மறியலில் வைக்கப்படலாம்.

பொதுவாக சந்தேக நபர் பின்வரும் காரணங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்படுவார் :

1)விசாரணையைத் தடையின்றி முன்கொண்டு செல்வதற்கு,

2 ) சந்தேக நபர் சாட்சியைக் குலைப்பதை அல்லது அச்சுறுத்துவதைத் தடுப்பதற்கு,

3 )சந்தேக நபர் சமூகத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த,

4 )நீதிமன்ற வருகையை உறுதி செய்து, குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு முன்னர் தப்பி ஓடுவதைத் தடுக்க,

விளக்க மறியலில் வைக்கப்படுவார்.

எனினும், ஒரு நபரைக் குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு முன்பு, தடுத்து வைப்பது பொதுவாக நியாயமற்றது என்பதால், நியாயமான காரணங்கள் காணப்பட்டால் மட்டுமே, “தேவைப்படும் காலத்திற்கு” சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்படுவர்.

இவ்வாறு மறியலில் வைக்கப்படும் நபர், பிணையில் தன்னை விடுவித்துக்கொள்ள முடியும்.

பிணை என்பது ஒரு சந்தேக நபரைத் தற்காலிகமாகக் காவலிலிருந்து விடுவிக்கும் நடை முறையாகும். நம் நாட்டின் பிணைச் சட்டமானது “சதேகநபர் பிணை பெறுவது ஒரு விதியாக / உரிமையாக இருக்க வேண்டும் என்றும், பிணையை மறுப்பது விதிவிலக்காக இருக்க வேண்டும்” என்றும் கூறுகிறது. அதாவது முடியுமானவரை பிணை வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

பிணை பெறுவது தொடர்பாக, குற்றங்களை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:

1. பிணை பெறக்கூடிய குற்றங்கள் (Bailable Offence) – இந்த வழக்குகளில், சந்தேக நபருக்குப் பிணை பெற உரிமை உண்டு. எனவே இச் சந்தர்ப்பங்களில் பொதுவாகப் பிணை வழங்கப்படும். (அரிதான சூழ்நிலைகளில், நீதிமன்றம் பிணையை மறுக்கக்கூடும், அவ்வாறு மறுக்கப்பட்டால் தகுந்த காரணங்களை நீதிமன்றம் வழங்க வேண்டும்)

2. பிணை உரிமை இல்லாத குற்றங்கள் (Non Bailable Offence) – இதன் போது கூட, சந்தேக நபர்கள் பிணைக்கு விண்ணப்பிக்கலாம். நீதிமன்றிற்குப் பிணை வழங்கவோ மறுக்கவோ தற்துணிவு உண்டு. (காரணங்களை தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை)

பெரும்பாலும், விசாரணையை முன்கொண்டு செல்ல உதவ அல்லது சாட்சியை அச்சுறுத்துவதைத் தடுப்பதற்காக விளக்க மறியலில் வைக்கப்படும் நபர்கள், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு, பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.

துரதிருஷ்டவசமாக ஒரு சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டால், நீதிமன்றம் அல்லது அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள் . இது ஒரு தவறான புரிதலாகும்.

பிணை வழங்கப்படுகிறது என்பதன் பொருள் சந்தேக நபர், அவரது விசாரணை முடியும் வரை சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுகிறார் என்பதாகும். இது சந்தேக நபர் முற்றாக விடுவிக்கப்பட்டார் என்று அர்த்தமாகாது; அவர்கள் வழக்கு முடியும் வரை நீதிமன்றத்திற்கு வர வேண்டும். மேலும் அவர்கள் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டால், அதற்கேற்ப தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

நீதிமன்றத்தின் கடமை, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பது மட்டும் அல்ல, நிரபராதிகள் அநியாயமாகத் தண்டிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்வதுமாகும். எனவே குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகள் மற்றும் சமூகத்தின் நலன்கள் இரண்டையும் பாதுகாக்கும், வண்ணம் ஒரு சமநிலையைப் பேண சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப, சட்ட அடிப்படைகள் தொடர்பில் போதிய புரிந்துணர்வு முக்கியமாகும்.