ஒரே வழக்கு மாறுபட்ட தீர்ப்புகள்

சட்டத்தின் நோக்கம் நீதியை நிலை நாட்டுவதே! எனவே, அது எப்போதும் நிலையானதாக வேண்டும்.
அவ்வாறெனில், ஒரே விடயத்தில் நீதிமன்றங்கள் எவ்வாறு வேறுபட்ட தீர்ப்புக்களை வழங்குகின்றது?

கற்பனை செய்து கொள்வோம். வீதியோரத்தில் 

🚫

 “No Parking” பதாகை இருக்கும் இடத்தில் ஒருவர் விபத்துக்குள்ளாகி காயங்களுடன் கிடக்கிறார்.

ஒரு அம்புலன்ஸ் வண்டி வந்து காயப்பட்ட நபரை ஏற்றிச் செல்ல அங்கு நிறுத்தப்படுகிறது.

கடமை உணர்வு மிக்க போக்குவரத்து பொலிசார், NO Parking இல் நிறுத்தியதற்காய் வழக்குத் தொடுத்துவிட்டனர், என்று வைத்துக்கொள்வோம்.

அங்கே “வாகனங்கள் நிறுத்த கூடாது” என்பது சட்டம். அம்புலன்ஸ் வண்டியும் ஒரு வாகனமே. எனவே அது ஒரு குற்றமே, என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவர், சட்டத்தைப் பொருள் கோடல் செய்யச் சொற்பொருள் விதியைப் (Literal Rule) பயன்படுத்தி உள்ளார் என்று அர்த்தம்.

எழுத்தில் உள்ள சட்டத்தை அவ்வாறே பிரயோகித்தால், அபத்தமான (பொருந்தாத) முடிவு வரும் எனும் சந்தர்ப்பத்தில்,
இச் சட்டத்தை, “பொதுவாக இங்கு வாகனங்கள் நிறுத்த கூடாது, ஆனால் விதி விலக்கான சந்தர்ப்பங்களில் அது தவறு இல்லை” என்ற கருத்துடனே விளங்கிக்கொள்ள வேண்டும், எனவே இது குற்றமில்லை எனத் தீர்ப்பளித்தால், அந்த நீதிபதி பொன் விதியைப் (Golden Rule) பயன்படுத்தி உள்ளார் என்று அர்த்தம்.

இங்கே வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று பதாகை இடப்பட்டிருப்பது பொதுமக்களைப் பாதுகாக்கவே. எனவே காயப்பட்ட ஒரு நபரைக் காப்பாற்ற அங்கு அம்புலன்ஸ் நிறுத்தியது குற்றம் இல்லை எனத் தீர்ப்பளித்தால், அந்த நீதிபதி நோக்க விதியை (Purposive Approach) பயன்படுத்தி உள்ளார் என அர்த்தம்.

ஒரே சட்டம் தான். வெவ்வேறு விதமான பொருள் கோடல், வெவ்வேறு முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்.
நீதிமன்றங்கள் சரியான நியாயத்தை வழங்கப் பொருத்தமான விதியைக் கொண்டு சட்டத்தை பொருட்கோடல் செய்யும்.

விடயத்துக்கு வருவோம் –

உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 28(4)(a) பின்வருமாறு கூறுகிறது:

பிறந்த திகதியை உறுதிப்படுத்த, இளம் வேட்பாளர் ஒவ்வொருவரினதும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் “சான்றுப்படுத்தப்பட்ட” பிரதியினை அல்லது சத்தியக் கடதாசியை நியமனப்பத்திரத்தோடு இணைத்தல் வேண்டும்.

சில கட்சிகள் சமாதான நீதிவான், உறுதிப்படுத்திய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதியினை இணைத்திருந்தனர்.

இது ஏற்றுக்கொள்ளப் படாததால் உயர் நிதி மன்றத்திலும், மேல் முறையீடு நீதி மன்றத்திலும் வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

உயர் நீதிமன்ற தீர்ப்பு :
பதிவாளரால் அல்லது உதவிப்பதிவாளரினால் வழங்கப்படுகின்ற பிரதிதான் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி. சமாதான நீதவானால் வழங்கப்படுவது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி அல்ல (அது உண்மைப்படுத்தப்பட்ட பிரதி). எனவே வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சரியானதாகும்.

மேல் முறையீட்டு மன்ற தீர்ப்பு :
இச் சட்டத்தின் நோக்கம் இளம் வேட்பாளரது வயதை உறுதிப்படுத்துவதே. எனவே சமாதான நீதவானால் வழங்கப்பட்ட உண்மைப்படுத்தப்பட்ட பிரதியை அனுமதிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. எனவே வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரே சட்டம். மாறு பட்ட நோக்கு. இந்த விடயத்தில் எந்தப் பொருட்கோடல் விதி பொருத்தமானது என நீங்கள் நினைக்கிறீர்கள்?