இலங்கையின் சட்டவிரோத முதலீட்டு திட்டங்களின் உண்மை முகம்

“மாதந்தோறும் அதிக இலாபம் தரும் புரட்சிகரமான வேளாண்மை அல்லது சுற்றுலா திட்டம்” என்று விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?

உங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்வதற்கு முன், ஒரு நிமிடம் இதை வாசித்து விட்டு முடிவெடுங்கள். இந்த தகவல் உங்களைப் பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றக்கூடும்.

நம்ப முடியாத வாக்குறுதிகள்

இலங்கையில் ஆண்டுக்கு 24% முதல் 420% வரை “நிலையான இலாபம்” தருவதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. அழகான விளம்பரங்கள், அலங்கரிக்கப்பட்ட அலுவலகங்கள், செயற்கையாகக் காட்டப்படும் திட்டங்கள் என நம்பிக்கை தரும் முறையில் இந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன.

ஆனால் உண்மை என்ன? இவை அனைத்தும் சட்டவிரோதம். பலதும் ‘பொன்சி’ (Ponzi) எனப்படும் மோசடித் திட்டங்கள். புதிய முதலீட்டாளர்கள் சேர்வது நிற்கும் போது, இந்த நிறுவனங்கள் காணாமல் போய் விடும்.

பொதுமக்களிடம் இருந்து நிதி பெறும் சட்டரீதியான வழிமுறைகள் என்ன?

  • வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வைப்புகளை (Deposits) பெறும் நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் (CBSL) பதிவு செய்ய வேண்டும்.
  • பங்குகள், யூனிட் டிரஸ்ட், பொதுமக்கள் முதலீடுகள் போன்றவற்றைப் பெற பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) இல் பதிவு செய்யப்பட வேண்டும்.

👉 இந்த சட்டவிரோத திட்டங்கள் எதுவும் CBSL அல்லது SEC இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்ல.

மத்திய வங்கி இதுபற்றி தொடர்ச்சியாக பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இன்னும் பலர் இந்த ஏமாற்றுகளுக்கு இரையாகிறார்கள்.

நம்ப முடியாத அளவுக்கு அதிக இலாபம் வழங்க வாக்குறுதி தருதல், உரிய அரச அமைப்புகளில் பதிவு செய்யப்படாத நிறுவனமாக இருத்தல் ஆகியவை மோசடி திட்டங்களின் நேரடி அடையாளங்களாகும்.

சட்டம் என்ன சொல்கிறது?

கம்பெனிகள் சட்டம் எண்  மற்றும் பங்குச் சந்தை ஆணையச் சட்டம் படி:

  • தனியார் நிறுவனங்கள் (Private Limited) பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • பொது நிறுவனங்கள் (Public Limited Company – PLC) அல்லது பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களே (Public Listed Company) பொதுமக்கள் முதலீட்டை பெறலாம். அதற்கும் கடுமையான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காணப்படுகின்றன.

இவை மீறப்படும் போது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். உதாரணமாக:

  • 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
  • குறைந்தபட்சம் ரூ. 1 கோடி அபராதம்
  • தனியார் நிறுவனத்தை மூடிவிடும் உத்தரவு
  • மேலும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு (மோசடி)

மோசடியை எவ்வாறு அடையாளம் காண்பது?

  • வங்கிக் கடன் ஆண்டு வட்டி விகிதத்தை (12–15%) விட அதிகமான 24%–420% வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்தல்
  • உடனே முதலீடு செய்ய அழுத்தம் கொடுத்தல்
  • CBSL அல்லது SEC இல் பதிவு செய்யப்படாத தனியார் நிறுவனமாக இருப்பது
  • நிறுவனத்தின் பெயரில் அல்லாமல் தனிப்பட்ட நபர்களின் பெயரில் விளம்பரங்கள் வெளியிடுதல்

💡 சிறிய சோதனை: அவர்கள் 12–15% ஆண்டு வட்டியில் வங்கியில் கடன் எடுக்கலாம். ஆனால் ஏன் ஆண்டுக்கு 420% வரை செலுத்தி எங்களிடம் பணம் பெறுகிறார்கள்? இதுவே மோசடியை வெளிச்சம் போடக் கூடிய எளிய முறை .

மோசடிகாரர்கள் பயன்படுத்தும் உத்திகள்

  • சிலர் உண்மையான திட்டத்தில் ஈடுபடுவது போல் காட்டுவார்கள். நம்ப வைப்பதற்காக சிறிய அளவில் விவசாய செய்கைகளையும் மேற்கொள்வார்கள்.
  • நிலத்தின் உறுதிப் பத்திரம் (DEED)  தரப்படும்  
  • எழுத்துமூல ஒப்பந்தம் தரப்படும்

ஆனால் உங்கள் முதலீட்டை காப்பாற்ற இது எதுவும் உதவாது.

விளைவுகள்

இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படமாட்டார்கள். நிறுவனம் காணாமல் போகும் போது, நீங்கள் முழுவதையும் இழக்க நேரிடும்.

பாதுகாப்பான முதலீட்டை எவ்வாறு உறுதி செய்வது?

  • முதலீடு செய்வதற்கு முன் CBSL அல்லது SEC இல் உரிமம் பெற்ற நிறுவனமா என்று பார்த்து உறுதி செய்யவும்.

சந்தேகமான திட்டம் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனே புகார் செய்யவும்:

  • CBSL – நிதி புலனாய்வு பிரிவு (FIU)
  • பங்குச் சந்தை ஆணையம் (SEC)
  • நிறுவன பதிவகம் (ROC)
  • அருகிலுள்ள பொலிஸ் நிலையம்

இது அப்பாவி மக்களை மோசடிக்கு இரையாவதைத் தவிர்க்க உதவும்.

இறுதியாக

பொன்சி திட்டம் என்பது தொடர்ச்சியாக புதிய முதலீட்டாளர்கள் வரும் வரை மட்டுமே நிலைத்து நிற்கும் சங்கிலி. புதிய முதலீடுகள் நிற்கும் போது முழுவதும் சிதறி விழும்; கடைசியாக சேர்ந்தவர்கள் அனைத்தையும் இழக்க நேரிடும்

நண்பர்களுடன் இந்த தகவலைப் பகிர்ந்து மற்றவர்களையும் காப்பாற்றுங்கள்.