இலங்கை வக்பு சட்டமும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புக்களும்

இலங்கையில் 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க வக்பு சட்டமானது, வக்பு சபை, வக்பு தீர்ப்பாயம் எனும் இரு அமைப்புகளை உருவாக்குகின்றது. இவை பதிவுசெய்யப்பட்ட முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களை மேற்பார்வையிடுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பாக்கப்பட்டுள்ள நிறுவனங்களாகும்.

வக்பு சபை என்பது இலங்கை மின்சார சபை அல்லது நீர் வடிகாலமைப்பு சபை போன்று முழு அளவில் செயல்படும் ஒரு நிறுவனம் அல்ல, மாறாக இது ஒரு ஒழுங்கு முறைப்படுத்தும் மற்றும் விசாரணை செய்யும் அமைப்பாகும். சுருக்கமாக கூறினால், ஒரு மத்தியஸ்த சபையைப் போன்ற ஒரு பாத்திரத்தில் வக்பு சபை செயல்படுகிறது.

எனவே வக்பு சபையானது, பள்ளிவாசல்களை பதிவு செய்வது, அவற்றுக்கு நம்பிக்கையாளர்களை நியமிப்பது, அவற்றின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது, கணக்குகளை சமர்ப்பிக்க கோருவது, புகார்களை விசாரித்து தீர்ப்பளிப்பது போன்ற விடயங்களை கையாளும்.

வக்ப் தீர்ப்பாயம், வக்ப் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக முறையீடு செய்ய நிறுவப்பட்டுள்ளது.

வக்ப் சட்டத்தின் பிரிவு 14 , பள்ளிவாசலின் விடயங்களுக்கு பொறுப்பாக அதிகாரபூர்வமாக நியமிக்கப்படும் நபரே நபிக்கைப் பொறுப்பாளர் என்று வரையறை செய்கிறது. இவ்வாறு நியமிக்கப்படுபவர்களது பதவிக்காலம் 3 வருடங்களாகும். இவ்வாறு அதிகார பூர்வமாக நியமிக்கப்படாதவர்கள் அல்லது பதவிக்காலம் முடிவடைந்து நிருவாகத்தில் இருப்பவர்களை, சட்டம் “பொறுப்பில் இருப்பவர்கள்” என விளம்புகிறது.

ஒரு பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் குறித்த பள்ளிவாசலின் மரபிற்கமைய அப் பள்ளிவாசலின் பதிவு செய்யப்பட்ட ஜமாஅத்தினரால் தெரிவு செய்யப்படுவார்கள். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களை வக்ப் சபை நம்பிக்கையாளர்களாக நியமிக்கும்.

அவ்வாறு ஜமாஅத்தினர் தெரிவு செய்ய தவறினால் அல்லது நம்பிக்கையாளர் தெரிவு செய்வதில் தடங்கல்கள் இருக்குமானால், வக்ப் சபை “விஷேட நம்பிக்கையாளர்” சபையினை அதன் தற்றுணிவில் நியமிக்கும்.

நியமிக்கப்பட்ட ஒரு நம்பிக்கையாளரையோ அல்லது பல நம்பிக்கையாளர்களையோ, நியாயமான காரணங்களுக்காக, இடை நிறுத்தும் அல்லது நீக்கும் அதிகாரம் வக்ப் சபைக்கு உண்டு.
உதாரணமாக, திருப்தியற்ற நிருவாகம், ஊழல், நிதி முறைகேடு, அலட்சியமான நிருவாகம், தனிப்பட்ட வகையில் அல்லது சட்டரீதியான தகைமையீனம் போன்றவற்றைக் கூறலாம்.

இவ்வாறான புகாரை ஜமஆத்தினர் முன்வைக்கலாம் அல்லது வக்ப் சபை தாமாக முன்வந்து விசாரிக்கலாம்.

நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், குறித்த பள்ளிவாசலின் அதிகார்பூர்வனமான நிருவாகிகள் என்ற அடிப்படையில் பல பொறுப்புகள் அவர்கள் மீது சுமத்தப்படும். உதாரணமாக –

1 பழைய நிருவாகத்தில் இருந்து சொத்துக்களையும் ஆவணங்களையும் பொறுப்பெடுத்தல்
2 . பள்ளிவாசல் கடமை செய்ய பொருத்தமானவர்களை நியமித்து, நியாயமான சம்பளம் வழங்குதல்
3 . பள்ளிவாசல் நிதியினை உடனடியாக வங்கியில் வைப்புச்செய்தல் (10,௦௦௦ வரை நானாவித செலவுகளுக்காக வைத்துக்கொள்ளலாம்)
4 . வக்ப் சபையின் அனுமதியுடன் சொத்துக்களை வாங்கலாம் விற்கலாம் வாடகைக்கு விடலாம். (வாடகைக்கு விடும் போது வாடகை ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையாளர் சபையின் பதவிக்காலத்தை விஞ்சலாகாது)
5 பள்ளிவாசல் அசையும் அசையா சொத்துக்களின் இருப்பு பட்டியலை பேணுதல்.
6 . வருடத்திற்கு இரு முறை வக்ப் சபைக்கு கணக்கறிக்கையை சமர்ப்பித்தல்
7 . பள்ளிவாசல் விடயங்களையும் சொத்துக்களையும் வினைத்திறனாக நிருவாகித்தல்
என்பவற்றை பிரதானமாக கூறலாம்.

வக்ப் சபையின் உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஆக வக்ப் சட்டம் பள்ளிவாசல் நிருவகித்தல் எனும் விடயத்தில் நம்பிக்கையாளர் மீது கடும் பொறுப்பைச் சுமத்தும் முக்கியமான சட்டமாகும்.

இதை உறுதி செய்யும் கூட்டுப் பொறுப்பு ஒவ்வொரு ஜமஆத்தினருக்கும் இருக்கும் என்பதும் மறுமையில் ஜமஆத்தினர் ஒவ்வொருவரும் இதற்கு பதில் அளிக்கவேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.